'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதம் அடைந்த சாலை
சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியில் இருந்து கண்ணமனூர் செல்லும் சாலை சேதம் அடைந்துவிட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. இதனால் அனைத்து கிராம மக்களும் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.
-முருகன், வீரசின்னம்பட்டி.
இருசக்கர வாகனங்களால் இடையூறு
திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு இருசக்கர வாகனங்களில் வருவோர், பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் தங்களுடைய இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடையூறாக இருப்பதோடு, பயணிகள் இயல்பாக செல்வதற்கும் தொந்தரவாக இருக்கிறது. எனவே பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதை முறைப்படுத்த வேண்டும்.
-கண்ணன், திண்டுக்கல்.
மழைநீர் வடிகால் வசதி
திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு கிராமத்தை அடுத்த முருநெல்லிக்கோட்டையில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் சாரல் மழை பெய்தால் கூட தெருக்கள், குடியிருப்பு பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே மழைநீர் வடிகால் வசதி செய்து தரவேண்டும்.
-சாந்தகுமார், முருநெல்லிக்கோட்டை.
குடிநீர் வினியோகம் சீராகுமா?
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டி கிராமம் கல்லுப்பட்டியில் குடிநீர் வினியோகம் சீராக இல்லை. இதனால் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலை உள்ளது. எனவே சீரான முறையில் தினமும் குடிநீர் வினியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், கல்லுப்பட்டி.