'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
புகாருக்கு உடனடி தீர்வு; 'தினத்தந்தி'க்கு நன்றி
பழனி 30-வது வார்டு லால்பகதூர் சாஸ்திரி தெருவில் பாலம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டிய மண்ணை சாலையில் குவித்து வைத்ததால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது என்று 'தினத்தந்தி புகார்பெட்டிக்கு' வாட்ஸ்-அப் மூலம் புகார் வந்தது. நேற்று அந்த புகார் குறித்த விவரங்கள் படத்துடன் பிரசுரமானது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையில் குவிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தியது. பிரச்சினைக்கு உடனடி தீர்வு கிடைக்க உதவிய 'தினத்தந்திக்கு' நன்றி.
-செந்தில்குமார், பழனி.
ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை
திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தெரு நாய்கள் சுற்றித்திரிவது தொடர்கதையாகி வருகிறது. டிக்கெட் கவுண்ட்டர் அருகே காத்திருக்கும் பயணிகளை கடிப்பது போன்று தெரு நாய்கள் அவர்களின் அருகில் செல்கின்றன. இதனால் பீதியுடனேயே ரெயில் நிலையத்தில் பயணிகள் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜேஷ், திண்டுக்கல்.
அகற்றப்படாத குப்பைகள்
கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. ஆனால் இந்த குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை. இதனால் அப்பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முருகன், கன்னிகாளிபுரம்.
முழுநேர ரேஷன் கடை வேண்டும்
குஜிலியம்பாறை தாலுகா கோவிலூரில் பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் முறையாக ரேஷன் பொருட்களை வாங்க முடியவில்லை. ஒரு சிலர் ரேஷன் பொருட்களே கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே முழுநேர ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், கோவிலூர்.
விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
பழனியை அடுத்த புதுஆயக்குடியில் இருந்து பொன்னிமலைக்கரடுக்கு செல்லும் சாலையின் ஒரு பகுதி மண்மேடாக மாறியுள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சமன்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-கணேசன், ஆயக்குடி.
பயன்பாட்டுக்கு வராத கழிப்பறை
பெரியகுளத்தை அடுத்த பொம்மிநாயக்கன்பட்டி பெரியார் காலனியில் பெண்களுக்கான கழிப்பறை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் நிலைக்கு அப்பகுதி பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.