தினத்தந்தி புகார்பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டி, பொதுமக்கள் புகார்கள் பற்றிய பதிவுகள்.
சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
சோளிங்கர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் தபால் அலுவலக தெருவில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வழிந்தோடுகிறது. சாலையில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றமும் வீசுகிறது. கால்வாய் அமைக்கும் பணியை அதிகாரிகள் துரிதப்படுத்த வேண்டும்.
-பார்த்தசாரதி, சோளிங்கர்.
சாலை ஆக்கிரமிப்பு
ஆரணி தாலுகா காட்டுகானூர் கிராமத்தில் நடுத்தெருவில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து பெருமாள் கோவில் தெரு, தெற்கு வீதிக்கு செல்லும் 30 அடி சாலையை ஆக்கிரமித்துள்ளனர். தற்போது அந்த சாலை 5 அடி அகலம் மட்டுமே உள்ளது. அங்குள்ள வளைவு உள்ள பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றுவார்களா?
-அ.காமராஜ், காட்டுகானூர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
போளூர் கோவிந்தசாமி தெரு வழியாக அதிகமான வாகனப் போக்குவரத்து உள்ளது. அங்குள்ள மக்கள், பள்ளி மாணவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்துக்கு சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். அதிவேகமாக வரும் வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது. கோவிந்தசாமி தெருவில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க ேவண்டும்.
-ஆட்டோ க.முத்து, சமூக ஆர்வலர் போளூர்.
கழிவுநீர் கால்வாய்களில் கிடக்கும் குப்பைகள்
செங்கம் புதிய பஸ் நிலையத்தில் கழிவுநீர் கால்வாய்களில் அதிகமாக குப்பைகள் சேர்ந்து கழிவுநீர் செல்லாமல் தேங்கி உள்ளதால் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. கால்வாய்களில் தேங்கி உள்ள பிளாஸ்டிக் குப்பைகள், கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பாலச்சந்திரன், செங்கம்.
கழிவுநீர் கால்வாய் நடுவே இருக்கும் மின்கம்பங்கள்
ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட 35-வது வார்டு பெத்லகேம் பகுதியில் 4-வது தெருவில் நகராட்சி சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடந்தது. அப்போது இரு இடங்களில் மின்கம்பத்தை கழிவுநீர் கால்வாயின் நடுவே வைத்துக் கட்டி உள்ளனர். மின்கம்பங்கள் கழிவுநீர் செல்ல தடையாக உள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜன், சமூக ஆர்வலர் ஆம்பூர்.
கால்வாயை தூர்வார ேவண்டும்
ஆற்காடு வாத்தியார் கோவிந்தராஜி தெரு நாகாத்தம்மன் கோவில் அருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. அதில் கழிவுநீர் சரியாக ஓடாமல் தேங்கி நிற்கிறது. அதில் இருந்து விஷ புழு, பூச்சிகள் வெளியேறி குடியிருப்புகளுக்கு வருகின்றன. கழிவுநீர் தடையின்றி செல்ல கால்வாயை தூர்வார வேண்டும்.
-ஜீவன், ஆற்காடு.
நச்சுப்புகையால் வாகன ஓட்டிகள் அவதி
வேலூரை அடுத்த அலமேலுமங்காபுரம் சர்வீஸ் சாலை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகைமூட்டம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் செல்ல இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாயவன், வேலூர்.
குடிநீர் குழாய் சீரமைக்க வேண்டும்
வேலூர் கன்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்துவதற்காக ஆங்காங்கே குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றில் ஒரு சில குடிநீர் குழாய்கள் பழுதாகி உள்ளன. ரெயில் பயணிகள் தாகத்துக்கு குடிநீர் பிடிக்க சென்றால் பழுது காரணமாக ஏமாற்றம் அடைகின்றனர். எனவே ரெயில்வே துறை அதிகாரிகள் பழுதான குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்
-மாலவன், வேலூர்.