'தினத்தந்தி' செய்தி எதிரொலி:சமணர் படுகையை சுத்தம் செய்த கல்லூரி மாணவர்கள்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக சமணர் படுகையை கல்லூரி மாணவர்கள் சுத்தம் செய்தனர்.
உத்தமபாளையத்தில் வரலாற்றுச் சின்னமான சமணர் படுகை உள்ளது. இந்த சமணர் படுகை பராமரிப்பு இன்றி உள்ளதாக 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று சமணர் படுகைக்கு சென்று அங்குள்ள பகுதி முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லூரியின் வரலாற்று துறை தலைவர் வர்கீஸ் ஜெயராஜ் கூறியதாவது, 'தினத்தந்தி'யில் சமணர் படுகை குறித்து ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை குறித்து மாணவர்கள் மத்தியில் வாசிக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக எழுந்து அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்பேரில் நேற்று சமணர் படுகை முழுவதும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மேலும் இந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவ, மாணவிகள் சார்பில் கடிதங்கள் அனுப்ப உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.