'தினத்தந்தி' செய்தி எதிரொலி:சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, கம்பம் பகுதியில் சேதமடைந்த நெற்பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் முல்லைப்பெரியாறு அணை பாசனம ்மூலம் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. இந்நிலையில் முதல் போகம் சாகுபடி செய்த நெற்பயிர்கள் தற்போது விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த 3 நாட்களாக பெய்த கன மழையால் வயலில் தண்ணீர் தேங்கியதால் நெற்பயிர்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். மேலும் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று கம்பம் வட்டார வேளாண்மைத்துறை உதவி அலுவலர் சதிஷ் மற்றும் அதிகாரிகள் சேதமடைந்த வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தற்போது முதல் போக நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனை எந்திரத்தின் மூலம் அறுவடை செய்து கொள்ளலாம். ஓரிரு இடங்களில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மட்டும் நெற்பயிர்கள் சாய்ந்துள்ளன. பெரும் பாதிப்புகள் ஏற்படவில்லை, இருந்தாலும் சேதமடைந்த பகுதிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.