'தினத்தந்தி' செய்தி எதிரொலி:ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு கொடுக்க கூடாது :வனத்துறையினர் அறிவுரை


தினத்தந்தி செய்தி எதிரொலி:ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் குரங்குகளுக்கு பொதுமக்கள் உணவு கொடுக்க கூடாது :வனத்துறையினர் அறிவுரை
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக, ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் குரங்குகளுக்கு உணவு கொடுக்க கூடாது என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

தேனி

'தினத்தந்தி' செய்தி

தேனி-மதுரை மாவட்ட எல்லையாக ஆண்டிப்பட்டி கணவாய் மலைச்சாலை உள்ளது. இந்த பகுதியில் தர்மசாஸ்தா கோவில் மற்றும் மாதா ஆலயம் உள்ளது. காடுகள் சூழ்ந்த இந்த சாலையில் ஏராளமான குரங்குகள் உள்ளன. சாலை ஓரங்களில் குட்டிகளுடன் அமர்ந்திருக்கும் குரங்கு கூட்டம் உணவுக்காக மனிதர்களை எதிர்பார்த்து கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அந்த வழியாக செல்லும் மக்கள் குரங்குகளுக்கு உணவளித்து பழக்கப்படுத்தி விட்டனர். இதனால் அந்தக் குரங்குகள் இயற்கையாகவே இரையை தேடி உண்ணும் பழக்கத்தை மறந்து உணவுக்காக மனிதர்களை எதிர்பார்க்கும் அவலநிலை உள்ளது. இதுகுறித்து 'தினத்தந்தி'யில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது.

குரங்குகளுக்கு உணவு

இதன் எதிரொலியாக, ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் ஆண்டிப்பட்டி கணவாய் மலைப்பகுதிக்கு நேற்று வந்தனர். அப்போது தர்மசாஸ்தா கோவிலுக்கு வந்த பொதுமக்கள் மற்றும் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களிடம், குரங்குகளுக்கு யாரும் உணவோ, குடிநீரோ கொடுக்க கூடாது என்று அறிவுறுத்தினர்.

வனப்பகுதிக்குள் குரங்குகளுக்கு தேவையான பழ மரங்கள் அதிகம் உள்ளதால் அவற்றிற்கு உணவு அளித்து குரங்குகளின் இயற்கையான வாழ்வியல் முறையை மாற்ற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து வனப்பகுதிக்குள் கட்டப்பட்டுள்ள தொட்டியில் தினமும் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, வனச்சரகர் உத்தரவிட்டார். மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தின் போது ஆண்டிப்பட்டி கணவாய் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு பலன் தரும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.


Next Story