பாழடைந்து கிடக்கும் பழைய கோர்ட்டு கட்டிடம்


பாழடைந்து கிடக்கும் பழைய கோர்ட்டு கட்டிடம்
x

திருவாரூர் நகரில் பாழடைந்து கிடைக்கும் பழைய கோர்ட்டு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் நகரில் பாழடைந்து கிடைக்கும் பழைய கோர்ட்டு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழைய கோர்ட்டு அலுவலகம்

தஞ்சையை அடுத்து விவசாயத்தை முதன்மையான தொழிலாக கொண்ட மாவட்டம் திருவாரூர். திருவாரூரில் எங்கு பார்த்தாலும் வயல்வெளிகள் தான் கண்ணில் தொியும். இருப்பினும் புதிய, பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என ஏராளமான நிறுவனங்கள் உள்ளன.திருவாரூரில் நகராட்சி அலுவலகம் அருகே பழைய கோர்ட்டு அலுவலகம் இயங்கி வந்தது. இது ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டாக இருந்து வந்தது. நகரின் மையப்பகுதியில் இருந்ததால் திருவாரூர் மாவட்ட பொதுமக்கள் கோர்ட்டின் மூலம் பல்வேறு வழக்குகளில் தீர்வு பெற்று வந்தனர்.

புதிய கட்டிடம்

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கோர்ட்டு அந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரை கோர்ட்டு அங்கு தான் இயங்கி வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே இயங்கி வந்த பழைய கோர்ட்டு வளாகம் தற்போது உரிய பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து குறுங்காடு போல் காட்சி அளிக்கிறது. கோர்ட்டு கட்டிடங்கள் சேதமடைந்து, சிமெண்டு காரைகள் பெயர்ந்து பாழடைந்த நிலையில் உள்ளது.இதனால் அந்த வழியாக மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.சிலர் கோர்ட்டு வளாகத்தை குப்பைகள் கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். செடி கொடிகள் வளர்ந்து காணப்படுவதால் அந்த பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகஅ ளவில் காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இந்த கட்டிடம் விளங்குகிறது. மேலும் கோர்ட்டு கட்டிடத்தில் உள்ள சுவரில் மரம் ஒன்று வளர்ந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

குறுங்காடு போல்

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளர் ரமேஷ்:- சேதமடைந்த கோர்ட்டு கட்டிடம் ஐகோர்ட்டு கட்டுப்பாட்டில் உள்ளது. சேதம் அடைந்து உரிய பராமரிப்பின்றி குறுங்காடு போல் காட்சியளிக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க உத்தரவிடலாம். எந்த ஒரு உயிரற்ற பொருளாக இருந்தாலும் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தால்தான் அது பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் இருக்கும். பயன்பாடு இல்லாமல் இருந்தால் சேதம் அடைந்து ஆபத்தான நிலைக்கு மாறிவிடும்.தற்பொழுது மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பாழடைந்து கிடக்கும் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை இந்த கட்டிடத்தில் செயல்பட செய்யலாம்.

அரசு சார்பில் கல்வி நிலையங்கள்

திருவாரூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகசுந்தரம் தெரிவித்ததாவது:-

பழைய கோர்ட்டு வளாகம் பயன்பாடின்றி மிக மோசமான நிலையில் உள்ளது. திருவாரூர் நகரில் அரசு மகளிர் கல்லூரி இல்லை.இதனால் இந்த இடத்தில் அரசு சார்பில் இயங்கக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அல்லது அரசு மகளிர் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிலையங்களை உருவாக்கினால் பின் தங்கிய மாவட்டமான திருவாரூர் கல்வியில் முன்னேற வாய்ப்பு உள்ளது.



Next Story