அமராவதி ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம்


அமராவதி ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம்
x

அமராவதி ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதம்

நாகப்பட்டினம்

போடிப்பட்டி

மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்துள்ள நிலையில் அதனை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உயர்மட்ட பாலம்

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும், பாசன ஆதாரமாகவும் அமராவதி ஆறு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களின் எல்லைக் கோடு போல இந்த ஆறு அமைந்துள்ளது. கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரு மாவட்டங்களையும் இணைக்கும் வகையில் ஆற்றின் மேல் பழமையான உயர் மட்டப் பாலம் அமைந்துள்ளது.

தினசரி நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் கடந்து செல்லும் இந்த ஆற்றுப்பாலம் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பக்கவாட்டு சுவர்களில் மரங்கள் முளைத்தும், தரைத்தளத்தில் புற்கள் வளர்ந்தும் உள்ளதால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பக்கவாட்டு சுவர்

இந்தநிலையில் பல மாதங்களுக்கு முன் நடந்த வாகன விபத்தால் பாலத்தின் ஒரு பகுதியில் பக்கவாட்டு சுவர் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த பக்கவாட்டு சுவர்களில் சாய்ந்து நின்று சில நேரங்களில் சற்று தொலைவில் செல்லும் ரெயில், சலசலத்து ஓடும் ஆறு என இயற்கையை பலரும் ரசிக்கின்றனர். அதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டு சுவர் முழுமையாக உடைந்தால் பொதுமக்கள் ஆற்றில் விழும் அபாயம் உள்ளது.எனவே பாலத்தின் சேதமடைந்த பக்கவாட்டு சுவரை சீரமைக்கவும், பாலத்தை முழுமையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பாலத்தில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் இரவு நேரத்தில் பணி முடிந்து திரும்பும் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.எனவே பாலத்தின் மீது விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



Next Story