குண்டும் - குழியுமாக காட்சியளிக்கும் தேசியநெடுஞ்சாலை
திருவாரூரில் ஆபத்தான நிலையில் குண்டும் - குழியுமாக காட்சியளிக்கும் தேசியநெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டு்ம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர்;
திருவாரூரில் ஆபத்தான நிலையில் குண்டும் - குழியுமாக காட்சியளிக்கும் தேசியநெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டு்ம் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருவழி சாலை
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலை திருவாரூர் நகர் வழியாக செல்கிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையை இருவழி சாலையாக மாற்றி அமைக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் நகர் பகுதி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்லாமல், புறவழிச் சாலையாக அமைக்க திட்டமிடப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக நாகை, வேளாங்கண்ணிக்கு நாகூர் பகுதிக்கு வாகனங்கள் செல்கிறது.
குண்டும் குழியுமான சாலை
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையை இருவழி சாலையாக அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இந்த சாலையை முழுமையாக சீரமைப்பு செய்யாமல் தற்காலிகமாக அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த சாலை தஞ்சை-நாகை செல்லும் பிரதான சாலை என்பதால் அதிகமான வாகன போக்குவரத்து மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த சாலை நீண்ட காலமாக பழுதடைந்து பல இடங்களில் கம்பிகள் பெயர்ந்து குண்டு, குழியுமாக காட்சியளிக்கிறது.குறிப்பாக திருவாரூர் ஆண்டிப்பாளைம் மாவட்ட எல்லை முதல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரையிலான சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக காட்சிளிக்கிறது.
பள்ளங்களில் தண்ணீர்
தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகிறார்கள்.எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்துள்ள சாலையை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.