50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு


50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே தாதா ராவ் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அருகே தாதா ராவ் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்கள் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தாதா ராவ் ஏரி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் சுமார் 200 ஏக்கர் நில பரப்பில் தாதா ராவ் ஏரி உள்ளது. இந்த ஏரி தமிழகத்தில் 120 ஏக்கர் மற்றும் கர்நாடகாவில் 80 ஏக்கரில் அமைந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் ஏரி வறண்டு காணப்பட்டது. இந்த ஏரியில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுநீர் கலந்தது.

இந்த நிலையில் ஜூஜூவாடி பகுதியில் கிணற்று நீரை பயன்படுத்தி விவசாயிகள் கீரை வகைகள், முள்ளங்கி, கத்தரிக்காய், பீட்ரூட், வாழை மற்றும் கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை விளைவித்தனர். கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக தாதா ராவ் ஏரி நிரம்பியது. ஆனால் உபரிநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீர் செல்ல வழி இல்லை. இதனால் ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் 50 ஏக்கர் நிலங்கள் பாதித்துள்ளது.

விவசாயிகள் கோரிக்கை

இதனால் விவசாய நிலங்களில் உள்ள தண்ணீர் வற்றாததால் பயிர்கள் அழுகின. மேலும் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், 25 ஆண்டுகளாக நிரம்பாத தாதா ராவ் ஏரி தற்போது நிரம்பியதால் ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும், மறுபுறம் ஏரியின் உபரிநீர் வெளியேற வழியின்றி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story