பலத்த காற்று காரணமாக படகுகள் சேதம்
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் பலத்த காற்று காரணமாக படகுகள் சேதம் அடைந்தன.
தூத்துக்குடி அருகே தருவைகுளத்தில் பலத்த காற்று காரணமாக படகுகள் சேதம் அடைந்தன.
தருவைகுளம்
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தில் சுமார் 230 ஆழ்கடல் விசைப்படகுகளும், 150 நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்த படகுகள் தருவைகுளம் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்படுகின்றன. அதே போன்று அங்கு உள்ள பாலத்தின் ஓரங்களிலும் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பகுதி மீனவர்கள் நீண்ட காலமாக படகுகளை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பலத்த காற்று
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. இந்த காற்று காரணமாக கடலில் நங்கூரமிடப்பட்ட படகுகள் கரையை நோக்கி தள்ளப்பட்டன. படகுகள் ஒன்றோடு ஒன்று மோதத் தொடங்கின. பாலத்தில் நிறுத்தப்பட்டு இருந்த படகுகளும் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் மீனவர்கள் விரைந்து தங்கள் படகுகளில் ஏறி, படகை இயக்கி காற்றுக்கு எதிராக படகை இயக்கினர். தொடர்ந்து 7 மணி வரை இந்த காற்றின் தாக்கம் இருந்தது. அதன்பிறகு மெல்ல மெல்ல காற்றின் வேகம் குறைந்தது. அதன்பிறகு மீண்டும் படகை நிறுத்தி விட்டு மீனவர்கள் கரை திரும்பினர்.
இந்த காற்று காரணமாக சில படகுகள் கரைக்கு தள்ளப்பட்டன. இதில் அந்த படகுகள் சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து நேற்று காலையில் அந்த படகுகளை மீனவர்கள் கிரேன் மூலம் கரையில் பராமரிப்பு மேற்கொள்வதற்காக தூக்கி வைத்தனர்.