ரெட்டி குடிகாடு கிராமத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம்
ரெட்டி குடிகாடு கிராமத்தில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.
மின்சாதன பொருட்கள் சேதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது குன்னம் தாலுகா, ரெட்டி குடிகாடு கிராமத்தில் வீசிய சூறைக்காற்றில் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசி உயர் மின்னழுத்தம் ஏற்பட்டது.
இந்த மின் அழுத்தத்தின் போது, சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டி.வி., பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மினி விசிறி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் புகைந்து சேதமடைந்தது. இரவில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமலும், வீட்டிற்குள் இருக்க முடியாமலும் தவித்தனர்.
நஷ்டஈடு வழங்க கோரிக்கை
இதையடுத்து நேற்று காலை அக்கிராம மக்கள் சேதமடைந்த மின்சாதன பொருட்களை சாலையில் வைத்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். மேலும் அவர்கள் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதடைந்த மின் சாதன பொருட்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதேபோல் வேப்பந்தட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. தொண்டமாந்துறை ஊராட்சி பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளில் மின்னல் தாக்கி பழுதடைந்தது. இதனால் தொண்டமாந்துறை கிராமம் தெருவிளக்கு இல்லாமல் இருளில் மூழ்கியது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்விளக்கு மற்றும் உயர் கோபுர விளக்குகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.