சுருளியாறு நீர்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி பாதிப்பு
கூடலூர் அருகே சுருளியாறு நீர்மின் நிலையத்தில் எந்திரம் பழுதானதால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையம்
கூடலூர் அருகே சுருளியாறு நீர்மின் உற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கு மேகமலை வனப்பகுதியில் உள்ள இரவங்கலாறு அணையில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பகுதி வனப்பகுதிக்குள் உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் 2 ஆயிரத்து 900 மீட்டர் நீளத்துக்கு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு 220 மீட்டர் தூரம் குழாய் அழுத்தம் தாங்காமல் வெடித்தது. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெற்றது. அதன்பிறகு மின் உற்பத்தி நிலையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட சிறிய பிரச்சினைகளை சரிசெய்து இயக்கி பார்த்தனர். ஆனால் டர்பைனில் கோளாறு ஏற்பட்டது. இதனை ஓய்வுபெற்ற தலைமை பொறியாளர் நமச்சிவாயம் தலைமையிலான குழுவால் சீரமைக்கப்பட்டது.
எந்திரம் பழுது
இதையடுத்து 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் இரவங்கலாறு அணையில் இருந்து வினாடிக்கு 81 கன அடி நீர் குழாய் வழியாக திறக்கப்பட்டது. அதன்மூலம் சுருளியாறு நீர்மின் நிலையத்தில் 20 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால் மின் உற்பத்தி குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மின் உற்பத்தி நிலையத்தில் எந்திரங்கள் மீண்டும் பழுதானது. இதனால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக செயல்படாத எந்திரங்களை முறையாக கவனிக்காததால் தற்போது மீண்டும் அவை பழுதாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே சுருளியாறு மின் நிலையத்தில் எந்திரங்கள் அனைத்தையும் உரிய முறையில் சீரமைத்து மின் உற்பத்தி சீராக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.