புயல் காரணமாக மீன்பிடி பாதிப்பு: ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது


புயல் காரணமாக மீன்பிடி பாதிப்பு:  ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது
x

புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்லாததால் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது.

ஈரோடு

புயல் காரணமாக கடலில் மீன் பிடிக்க மீனவர்கள் செல்லாததால் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீன்கள் வரத்து குறைந்தது.

கடன் மீன்கள்

ஈரோடு ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. ஸ்டோனி பாலம் மார்க்கெட்டுக்கு தூத்துக்குடி, நாகை, காரைக்கால், ராமேஸ்வரம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து கடல் மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன. அங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை மும்முரமாக நடைபெறும். இதையொட்டி மீன்களும் விற்பனைக்காக அதிகமாக கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்வது குறைந்ததால் ஈரோட்டில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. பொதுமக்களும் ஆர்வமாக வந்து மீன்களை வாங்கி சென்றதால், விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.

6 டன்

இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

நாகை, காரைக்கால் ஆகிய இடங்களில் புயல், கனமழை அறிவிப்பு காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் அந்த பகுதிகளில் இருந்து ஈரோட்டுக்கு மீன்கள் வரவில்லை. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 12 டன் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். ஆனால் இந்த வாரம் 6 டன் மீன்கள் மட்டுமே விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. வரத்து குறைவாக இருந்தாலும், மீன்களின் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.

ஒரு கிலோ வஞ்சிரம் மீன் ரூ.800-க்கும், வாவல், விரால் ஆகிய மீன்கள் தலா ரூ.600-க்கும், ஊளி, பாறை, விலாங், கடல் கொடுவா ஆகிய மீன்கள் தலா ரூ.450-க்கும், நெத்திலி, அயிலை ஆகிய மீன்கள் தலா ரூ.250-க்கும், மத்தி மீன் ரூ.200-க்கும், நண்டு ரூ.500-க்கும் விற்பனை ஆனது. இதேபோல் அணை மீன்களான கட்லா, லோகு, பாறை ஆகிய மீன்கள் ஒரு கிலோ ரூ.170-க்கும், நெய் மீன் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story