அரசு திட்டவிளக்க பதாகை சேதம்:2 பேர் மீது வழக்கு
மெஞ்ஞானபுரம் அருகேஅரசு திட்டவிளக்க பதாகையை சேதப்படுத்திய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் அருகே லெட்சுமிபுரம் ஊராட்சியில் வேப்பங்காடு -வாகைவிளை-உடன்குடி சாலை விரிவாக்கம் மற்றும் உறுதிபடுத்தும் பணியை சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த திட்ட விளக்க பதாகை அரசு சார்பில் வேப்பங்காட்டில் வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள் சென்ற பின்னர் வேப்பங்காட்டைச் சேர்ந்த பட்டு மகன் ஜாண்சன், மனோகர் ராஜ் மகன் பிரின்ஸ் ஆகியோர் பதாகையை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதை தட்டிக்கேட்ட பொதுமக்களை 2 பேரும் அவதூறாக பேசியதுடன், மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து உடன்குடி யூனியன் தலைவரும், தி.மு.க. ஒன்றிய செயலாளருமான பாலசிங் மெஞ்ஞானபுரம் போலிசில் புகார் செய்தார். இதன் பேரில் ஜாண்சன், பிரின்ஸ் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.