பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை


பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை
x

பொது சொத்துகளை சேதப்படுத்திய வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு தடை விதித்தது

மதுரை


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நடுமுதலைக்குளத்தை சேர்ந்த ராஜேந்திரன், வெள்ளைச்சாமி, சக்திவேல் ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலரின் புகாரின்பேரில் பொதுச்சாலை, மோட்டார் அறை மற்றும் ஆழ்துளை கிணறு ஆகியவற்றை சேதப்படுத்தியதாக எங்கள் மீது விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடந்த டிசம்பர் மாதம் வழக்குபதிவு செய்தார். தற்போது நாங்கள் பிழைப்பு தேடி பொள்ளாச்சி சென்றுவிட்டோம். எங்களுக்கு சொந்தமான நிலம் நடுமுதலைக்குளத்தில் உள்ளது. இதற்கிடையே எங்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஊராட்சி சார்பில் மோட்டார் அறை, ஆழ்துளை கிணறு, சாலை ஆகியவை ஏற்படுத்தியுள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். 90 நாட்களுக்குள் எங்கள் இடத்தில் உள்ள சாலை, மோட்டார் அறை, ஆழ்துளை கிணறு ஆகியவற்றை அகற்றவும், மின் இணைப்பை துண்டிக்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து நாங்கள் எங்கள் நிலத்தை மேம்படுத்தும் பணிகளை செய்தோம். அப்போதுதான் நாங்கள் ஆழ்துளை கிணறு, மோட்டார் அறை போன்றவற்றை சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நாங்கள் பொதுச்சொத்துகளுக்கு எந்தவிதமான சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. எங்கள் நிலத்தில் பணிகளை செய்தோம். எனவே எங்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதன் மீதான விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் வக்கீல் சதீஷ்பாபு ஆஜராகி, தனிநபர்களின் நிலத்தில் பொது நடவடிக்கைகளை ஏற்படுத்தி, அவர்கள் மீதே குற்ற வழக்குபதிவு செய்தது ஏற்புடையதல்ல என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், மனுதாரர்கள் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தடைவிதிக்கப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story