திருவண்ணாமலை கோவில் சிலை சேதம் -அண்ணாமலை கண்டனம்


திருவண்ணாமலை கோவில் சிலை சேதம் -அண்ணாமலை கண்டனம்
x

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

புகழ்மிக்க திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, கோபுரத்தில் இருந்த இறைவனின் திருமேனியான சிலை உடைக்கப்பட்டு உள்ளது.

பெரும்பான்மை தமிழர்களை அவமானப்படுத்தினால், சிறுபான்மையினர் மகிழ்ச்சி அடைவார்கள் என்ற சிந்தனையில், தமிழ் மக்களின் இறை நம்பிக்கையோடு, விளையாடுவதற்காகவே, வேண்டும் என்றே தி.மு.க. அரசால் திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் இதுவாகும்.

விலைமதிப்பற்ற சிலைகளை கமிஷன்களுக்காக களவு போக அனுமதிப்பது யார்? இறைவனின் திருமேனிகளை அலங்கரிக்கும் தமிழக கோவில்களின் பாரம்பரியமிக்க பொன் நகைகளை எல்லாம் அதன் மதிப்பை அறியாது உருக்கி, தங்க கட்டியாக்கி அதிலும் ஊழலுக்கு வழி வகுப்பது யார்?.

இறை நம்பிக்கையில் உதாசீனம்

தமிழக மக்களின் இறை நம்பிக்கையை தொடர்ந்து உதாசீனப்படுத்தும் தி.மு.க.வினரை தமிழக மக்களும் அந்த ஆண்டவனும்கூட மன்னிக்கவே மாட்டார்கள். தொடர்ந்து தனக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்களில் தலையிட்டு மரபுகளை சிதைப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் தமிழக அரசு, அர்ச்சகர்களின் பயிற்சி காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்து அமைக்கும் முடிவினை தடாலடியாக எடுத்திருக்கிறது. இதற்கு தொன்மையான ஆதீனங்கள் பலரும் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, கோவில் சிலைகள் உடைப்பு, அர்ச்சகர்களின் பயிற்சி கால குறைப்பு, மரபுகளுக்குள்ளும், ஆன்மிக மடங்களுக்குள்ளும் தி.மு.க. அரசின் கொள்கை திணிப்பு என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. ஆன்மிக, மடாலய விஷயங்களில் அரசு தலையிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிக்கை

அண்ணாமலை வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில், ''இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 24 பேரை தாயகம் அழைத்துவர துரித நடவடிக்கை எடுத்து வரும் மத்திய இணை மந்திரி எல்.முருகன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோருக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.


Next Story