சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகள்
ராமநாதபுரத்தில் சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் சேதமடைந்த ஆயுதப்படை குடியிருப்பு வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேதமான வீடுகள்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் போலீசாருக்கு ஆயுதப்படை வளாகம் மற்றும் ஆயுதப்படை குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இங்கு ஆயுதப்படை காவலர்கள், கேணிக்கரை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய போலீஸ் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரையிலானவர்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கேணிக்கரை போலீசாருக்கு 58 வீடுகளும், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு 45 வீடுகளும், பஜார் காவல்நிலைய போலீசாருக்கு 48 வீடுகளும், இதர பிரிவு காவலர்களுக்கு 24 வீடுகளும், இதர பிரிவு உயர் அதிகாரிகளுக்கு 18 வீடுகளும் மற்ற வீடுகள் ஆயுதப்படையினருக்கும் என மொத்தம் 720 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளில் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை குடியிருந்து வருகின்றனர். இந்த வீடுகளில் சுமார் 310 வீடுகள் 30 ஆண்டுகள் கடந்த நிலையில் குடியிருக்க லாயக்கற்றதாக கருதப்பட்டு இடிக்க வேண்டிய நிலையில் உள்ளன. இதன்காரணமாக சேதமடைந்த வீடுகளில் உள்ளவர்கள் காலி செய்யப்பட்டு இடிப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் இடிந்து இப்ப விழுமோ எப்ப விழுமோ என்ற நிலையில் சில வீடுகள் உள்ளன. இந்த கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையிலும் அதனை கண்டுகொள்ளாமல் அதிகாரிகள் அதில் காவலர்களை குடியிருக்க வைத்துள்ளனர்.
நடவடிக்கை
உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் இந்த குடியிருப்புகளில் குடியிருக்க அதிகாரிகள் எவ்வாறு அனுமதித்தனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ஆயுதப்படையினரிடம் விசாரித்தபோது, சுமார் 310 வீடுகளை இடித்து தரைமட்டமாக்க அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இடிப்பதற்கு பரிந்துரைத்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆய்வுமட்டத்திலேயே இந்த கட்டிடம் இன்றளவும் உள்ளது. விரைவில் இடித்து தருவதாக மதுரையில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த வீடுகள் இடிக்கப்பட்டதும் புதிய வீடுகள் கட்ட அனுமதி கோரப்படும். இவ்வாறு கூறினர்.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த ஆயுதப்படை குடியிருப்பு கட்டிடம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.