சேதமடைந்த சுகாதார வளாகம்
கூத்தாநல்லூர் அருகே வெள்ளக்குடியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே வெள்ளக்குடியில் சேதமடைந்த சுகாதார வளாகத்தை அதிகாரிகள் கவனித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார வளாகம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள, வெள்ளக்குடியில் அப்பகுதியில் உள்ள மக்களின் பயன்பாட்டுக்கு பிள்ளையார் குளம் அருகில் சுகாதார வளாகம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை வெள்ளக்குடி கிராமத்தில் உள்ள கிராமப்புற மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சேதமடைந்த நிலையில் உள்ளது. கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டும், சுகாதார வளாகத்தில் உள்பகுதியில் உள்ள அறைகள் சேதமடைந்து கட்டிடத்தை சுற்றி உள்ளே சென்று வர முடியாத நிலையில் செடிகள் வளர்ந்து உள்ளன.
சீரமைக்க கோரிக்கை
இதனால், சுகாதார வளாகத்தை கடந்த சில ஆண்டுகளாக பயன்படுத்த முடியாமல் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சுகாதார வளாகம் கட்டிடம் பழுதடைந்து பல ஆண்டுகள் ஆகியும், அதை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் அல்லது இந்த சுகாதார வளாகத்தை இடித்து அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.