இடையக்கோட்டையில் சேதமடைந்த நூலக கட்டிடத்தால் விபத்து அபாயம்
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் சேதமடைந்த நூலக கட்டிடத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் கிளை நூலகம் உள்ளது. இங்கு வாசகர்கள் பயன்பெறும் வகையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் புரவலர்கள் மூலம் மாத, வார இதழ்களும் மற்றும் அனைத்து தினசரி நாளிதழ்களும் வருகின்றன. இடையக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த வாசகர்கள் தினமும் இந்த நூலகத்துக்கு வந்து புத்தகங்கள் மற்றும் நாளிதழ்களை படிக்கின்றனர்.
இந்தநிலையில் நூலக கட்டிடம் கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது நூலக கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. நூலக கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்துள்ளன. மேலும் கட்டிட சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் ஒருவித அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். இதுதவிர மழைக்காலங்களில் நூலக கட்டிடத்திற்குள் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ஒழுகுவதால் நூலகத்தில் இருக்கும் புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
எனவே ஆபத்தான நிலையில் உள்ள இடையக்கோட்டை நூலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அத்துடன் அங்கு போட்டி தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் இலவச போட்டி தேர்வு மையமும் தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.