சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
திருவாரூர் சிதம்பரம் நகரில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்
திருவாரூர் சிதம்பரம் நகரில் பராமரிப்பின்றி காணப்படும் சிறுவர் பூங்காவில் சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
சிறுவர் பூங்கா
திருவாரூர்- மயிலாடுதுறை சாலை அருகே சிதம்பரம் நகர் உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இதில் அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களும் குடியிருந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது. இதில் ஊஞ்சல், நடைபாதை, மின்விளக்கு வசதி, இருக்கைகள், சறுக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டது.
சேதமடைந்த விளையாட்டு உபகரணங்கள்
இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து பொழுதை கழிப்பது வழக்கம். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள். மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். தற்போது இந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு ஏணி உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது. சில விளையாட்டு பொருட்கனை காணவில்லை.
புதர்மண்டி கிடக்கிறது
பூங்காவில் செடிகள் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. பூங்காவில் வளர்ந்துள்ள புற்களை தின்பதற்காக மாடுகள், ஆடுகள் உள்ளே வருகின்றன.
இந்த பூங்கா பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் பாதையும், மின் விளக்குகளும் சேதமடைந்து உள்ளது. இதனால் விளையாடி பொழுதை கழிக்க முடியாமல் சிறுவர்கள் தவித்து வருகின்றனர்.
சமூக விரோதிகளின் கூடாரம்
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சிதம்பரம் நகாில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் நடைபயிற்சி செய்வோர் வசதிக்காக பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் அந்த பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை. இந்த நிலையில் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் கூடாரமாக மாறிவிட்டது, இதனால் பெண்கள் அந்த வழியாக செல்லவே அச்சப்படுகின்றனர்.
சீரமைக்க வேண்டும்
மேலும் சிறு மழை பெய்தாலும் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
எனவே சிறுவர் பூங்காவில் புதர்களை வெட்டி அகற்ற வேண்டும். அங்குள்ள விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.