சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
திருமருகல் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
திட்டச்சேரி:
திருமருகல் பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர் வலியுறுத்தினார்.
ஒன்றியக்குழு கூட்டம்
திருமருகல் ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாத்திமா ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:-
இளஞ்செழியன் (தி.மு.க.):- திருமருகல் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் 16 அரசு பள்ளியில் சேதமடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உள்ளன.இதனால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்
ஆர்.டி.எஸ்.சரவணன் (தி.மு.க.):- திருமருகல் ஒன்றியத்தில் பல பகுதிகளில் மின் கம்பங்கள் சேதம் அடைந்து சாய்ந்த நிலையிலும், மின்கம்பிகள் ஆபத்தான நிலையில் தாழ்வாகவும் செல்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதாகிருட்டிணன் (ஒன்றியக்குழுத்தலைவர்):- வருகிற 24-ந் தேதி முதல் நாகையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் அனைத்துத்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.