உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலை தடுப்புச்சுவர் விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை தேவை


உயிர்பலி வாங்க காத்திருக்கும் சாலை தடுப்புச்சுவர்    விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை தேவை
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் உயிர்பலி வாங்க காத்திருக்கிறது. எனவே விபரீதம் நடக்கும் முன்பு நடவடிக்கை எடுக்க கோாிக்கை விடுத்துள்ளனா்.

விழுப்புரம்


விழுப்புரம்- புதுச்சேரி நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக கருதப்படுகிறது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

இதனால் இச்சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையிலும், சாலை விபத்துகளை தடுக்கும் விதமாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு சாலையின் நடுவே தடுப்புச்சுவரும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரம் அருகே சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நள்ளிரவில் லாரி ஒன்று சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் அந்த தடுப்புச்சுவர் உடைந்து சேதமடைந்ததோடு அதிலுள்ள இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன.

தொடர் சாலை விபத்து

இதை சரிசெய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியப்போக்குடன் இருப்பதால் அடிக்கடி சாலைஅகரம் பகுதியில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்பகுதியில் எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் இல்லாததால் இரவு நேரங்களில் சாலை விபத்துகள் நடப்பது தொடர் கதையாக உள்ளது. விழுப்புரத்தில் இருந்து கோலியனூர் கூட்டுசாலை வரை எச்சரிக்கை பிரதிபலிப்பான்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்லும்போது ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

கடந்த 18-ந் தேதி அதிகாலை திருவாரூரில் இருந்து காஞ்சீபுரம் நோக்கிச்சென்ற அரசு பஸ், சாலைஅகரம் அரசு நடுநிலைப்பள்ளி அருகே வரும்போது எதிர்பாராதவிதமாக சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி பஸ் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர். இதுபோன்று தொடர் விபத்துகள் நடைபெறுவதை தடுக்க எச்சரிக்கை பிரதிபலிப்பான்களை பொருத்த மாவட்ட காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சீரமைக்கப்படுமா?

மேலும் சாலைஅகரம் பெட்ரோல் நிலையம் அருகில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து ஓராண்டாக இரும்புக்கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டபடி உயிர்பலி வாங்க காத்திருப்பதால் ஏதேனும் விபத்து ஏற்பட்டு விபரீதம் நடந்தால்தான் அதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். எனவே ஏதேனும் விபரீதம் நடப்பதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறையினர் விழித்துக்கொண்டு சேதமடைந்த அந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேநேரத்தில் சாலைஅகரம் கிராமம் தொடங்கும் பாதையில் ஆபத்தான வளைவு இருக்கிறது. அந்த வளைவில் அடிக்கடி சாலை விபத்துகள் நடப்பதால் அதனை தடுக்கும் வகையில் உடனடியாக அப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?.


Next Story