சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்
மயிலாடுதுறை பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறை பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஒன்றியக்குழு கூட்டம்
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக்கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடந்தது. ஒன்றிய ஆணையர் அன்பரசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நடந்த உறுப்பினர்கள் விவாதம் வருமாறு:-
வடவீரபாண்டியன் (காங்.):- இளந்தோப்பு-வடவஞ்சாறு சாலையில் திருக்குரக்காவல் பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்.
காந்தி (தி.மு.க.):- காளி ஊராட்சியில் பகுதிநேர ரேஷன்கடை வேண்டும். நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
வரி செலுத்தும் முறை
மோகன் (தி.மு.க.):-கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். இணையதளம் மூலம் ஊராட்சிகளில் வரிசெலுத்தும் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்த முறை நமது பகுதிக்கு எப்போது வரும். வள்ளாலகரம் ஊராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
சிவக்குமார் (தி.மு.க.):- மாப்படுகை ஊராட்சி கவரத்தெரு, பண்ணையார் தெரு, அமுதம் நகர் சாலைகள் சேதமடைந்து மிகவும் ்மோசமாக உள்ளது. அவற்றை சீரமைக்க வேண்டும். அய்யனார்கோவில் தெருவில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
சாலையை சீரமைக்க வேண்டும்
சக்திவேல் (பா.ம.க.):- பாண்டூர் ஊராட்சி குளத்தூர் முதல் அருண்மொழிதேவன் கிராமத்தை இணைக்கும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் அதனை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலைச்செல்வி (தி.மு.க.):- திருமங்கலம் ஊராட்சி மாங்குடி மயானத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும்.
பாக்கியலட்சுமி (தி.மு.க.): கடலங்குடி ஊராட்சி வடக்குத்தெருவில் ரேஷன்கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும். புதிதாக ஆரம்பசுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மகேஸ்வரி முருகவேல் மற்றும் உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.