டேன்டீ தொழிலாளர்கள் 5 ஆயிரம் பேருக்கு பயன்
டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், நீலகிரியில் 5 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்.
ஊட்டி
டேன்டீ தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க ரூ.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதால், நீலகிரியில் 5 ஆயிரம் பேர் பயன் பெறுவார்கள்.
தாயகம் திரும்பியவர்கள்
இலங்கையில் இருந்து தாயகம் திரும்பியவர்களுக்காக கடந்த 1968-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வனத்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் டேன்டீயை நிறுவியது. இதன் மூலம் 2445 குடும்பங்களுக்கு (4082 தொழிலாளர்கள்) கடந்த 1976-ம் ஆண்டு முதல் நிரந்தர வேலைவாய்ப்பு, தங்குவதற்கு வீடு மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது டேன்டீயில் 3,800 நிரந்தர தொழிலாளர்களும், 230 தற்காலிக தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டேன்டீ தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்தநிலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் நிலுவையில் இருந்தது. இதனால் நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
5,042 பேர் பயன்பெறுவார்கள்
இந்தநிலையில் தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தில் (டேன்டீ) பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கடந்த 1.10.2017-ந் தேதி முதல் பணிக்கொடை, முனைய விடுப்பு ஊதியம் மற்றும் இதர சட்டப்படி வழங்கப்பட வேண்டிய பயன்களான விடுப்புடன் கூடிய ஊதியம், மருத்துவ ஊதியம் வழங்க தேவையான ரூ.29.38 கோடி விடுவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிக்கொடை விரைவில் வழங்கப்பட உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 910 ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், 102 ஓய்வு பெற்ற ஊழியர்கள் பயன்பெறுவர். தற்போது பணிபுரிந்து வரும் 3,800 நிரந்தர தொழிலாளர்கள், 230 ஊழியர்கள் என மொத்தம் 5,042 பேர் பயன்பெறுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.