வருசநாடு அருகே பயங்கரம்:கழுத்தை நெரித்து விவசாயி கொலை:மகன் உள்பட 2 பேர் கைது
வருசநாடு அருகே விவசாயியை கழுத்தை நெரித்து கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
வருசநாடு அருகே உள்ள பொம்முராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி தேவி. இந்த தம்பதிக்கு நம்மவர், விக்ரம் (22) என்ற 2 மகன்கள் உள்ளனர். தேவி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார்.
மூத்த மகன் திருமணமாகி வெளியூரில் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் விக்ரம் குமணன்தொழு கிராமத்தில் உள்ள அத்தை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். மனைவி பிரிந்த பிறகு இளங்கோவன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை இளங்கோவன் அவரது மூத்த மகனுக்கு மட்டுமே கொடுத்து வந்ததாக தெரிகிறது.
பண உதவி
2-வது மகன் விக்ரமிற்கு, இளங்கோவன் எந்தவித பண உதவியும் செய்வதில்லை. மேலும் விக்ரம் செலவிற்காக பணம் கேட்டால் அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த விக்ரம் தனது தந்தையை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக இளங்கோவனை கொலை செய்யும் திட்டத்தில் அத்தை மகன் தமிழ்ச்செல்வனையும் சேர்த்துக்கொண்டார்.
இந்தநிலையில் இளங்கோவன் நேற்று முன்தினம் குமணன்தொழு கிராமத்திற்கு வந்தார். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த விக்ரம் இளங்கோவனுக்கு அதிக அளவில் மதுபானம் வாங்கி கொடுத்தார். பின்னர் மதுபோதையில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை விக்ரம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் பின்தொடர்ந்து சென்றனர்.
கழுத்தை நெரித்து கொலை
இருள் சூழ்ந்த பகுதியில் இளங்கோவன் சென்றபோது அவரது முகத்தை துண்டை வைத்து மூடி, கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து இளங்கோவன் உடலை சாலையில் தூக்கி வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்நிலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இளங்கோவன் இறந்து கிடப்பதை பாா்த்து வருசநாடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளங்கோவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் விக்ரம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரும் சேர்ந்து இளங்கோவனை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வந்தனர். அப்போது வருசநாடு பகுதியில் பதுங்கி இருந்த விக்ரம், தமிழ்ச்செல்வன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். விவசாயியை, மகனே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.