நடுரோட்டில் நிற்கும் மின்கம்பத்தால் விபத்து அபாயம்
கூடலூரில் நடுரோட்டில் மின்கம்பம் நிற்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கூடலூர்,
கூடலூரில் நடுரோட்டில் மின்கம்பம் நிற்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நடுரோட்டில் மின்கம்பம்
கர்நாடகா மாநிலம் மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள், லாரிகள் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இதில் கூடலூரில் இருந்து மேல் கூடலூர் செல்லும் இடைப்பட்ட பகுதியில் ஹெல்த் கேம் என்ற இடத்தில் சாலையின் நடுவே மின் கம்பம் உள்ளது. பகல் நேரத்தில் மின்கம்பத்தின் இருபுறமும் வாகனங்கள் சென்று வருகிறது. ஆனால், இரவில் மின்கம்பம் இருப்பது சரியாக தெரிவதில்லை. இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் மின்கம்பத்தில் மோதும் நிலை காணப்படுகிறது.
விபத்து அபாயம்
எனவே, மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் நட வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரிக்கும் என்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.