பாசன கால்வாயில் சிறுவர்கள் அபாயக் குளியல்
பாசன கால்வாயில் சிறுவர்கள் அபாயக் குளியல்
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே பாசனக் கால்வாயில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் குளித்து வருகிறார்கள்.
வெப்பத்தின் தாக்கம்
அமராவதி அணையிலிருந்து அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய்களில் தற்போது பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கால்வாயில் பல இடங்களில் பொதுமக்கள் துணி துவைப்பது, குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் சில இடங்களில் வாகனங்களைக் கழுவுவது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.இதனால் வாய்க்கால் மற்றும் பாசனக் கால்வாய்களில் குளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அந்தவகையில் காரத்தொழுவு கணியூர் ரோட்டுக்கு அருகிலுள்ள பாசன வாய்க்காலில் சிறுவர்கள் ஆபத்தான முறையில் குதித்து குளித்து வருகிறார்கள்.வாய்க்காலில் இருந்து மிகவும் உயரமாக உள்ள ரோட்டிலிருந்து குட்டிக்கரணம் போட்டு வாய்க்காலுக்குள் பாய்கிறார்கள்.
உற்சாக குளியல்
ஒருசில சிறுவர்கள் ரோட்டில் பாதியளவு சென்று அங்கிருந்து ஓடி வருகிறார்கள்.இதனால் ரோட்டில் வேகமாகச் செல்லும் வாகனங்களில் மோதி விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.அத்துடன் ஆபத்தான முறையில் உயரத்திலிருந்து குதிக்கும் போது வாய்க்காலின் பக்கவாட்டு சுவர்களில் மோதி காயமடையும் அபாயம் உள்ளது. இளங்கன்று பயமறியாது என்பது போல ஆபத்தான முறையில் தாவிக் குதித்து உற்சாகக் குளியல் போடும் சிறுவர்களைக் கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் அவசியமாகும்.மேலும் ஒருசில இடங்களில் பாசனக் கால்வாய்களில் வாகனங்களைக் கழுவுவதால் பாசன நீர் மாசடையும் நிலை உள்ளது.அதனையும் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும்.