சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
திருத்துறைப்பூண்டியில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டியில் சரக்கு வாகனத்தில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பயணிகள் வாகனங்களில் கூடுதல்வாடகை
திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 32 ஊராட்சி மற்றும் 92 சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். மேலும் நாகை மாவட்டம் வாய்மேடு, மருதூர், துளசியாப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டம் இடும்பவனம், தில்லைவிளாகம், திருப்பத்தூர், ராயநல்லூர் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகருக்கு பல்வேறு வேலை சம்பந்தமாகவும், ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி- கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.
இந்த பகுதியில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பயணிகள் அமர்ந்து செல்லும் வாகனங்களில் சென்றால் கூடுதல் வாடகை தர வேண்டும்.
ஆபத்தை உணராமல்...
எனவே சரக்கு வாகனங்களில் ஆபத்தை உணராமல் அளவுக்கு அதிகமான நபர்கள் நின்று கொண்டு பயணம் செய்கிறார்கள். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, இதுபோல சரக்கு வாகனங்களில் அளவுக்கு அதிகமான பொதுமக்களை ஏற்றி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.