பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்யும் மாணவர்கள்
தஞ்சையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தஞ்சையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கிராமப்புற மாணவர்கள்
தஞ்சை மாநகரம் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.மேலும் தஞ்சை மாநகரில் ஏராளமான கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதனால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.குறிப்பாக தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தஞ்சைக்கு பஸ்சில் வந்து பயின்று வருகிறார்கள். காலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்வோர், கூலி வேலைக்ளுக்கு செல்வோரும் அதிக அளவில் செல்வதால் காலை நேரங்களில் பஸ்களில் ஏறுவது என்பது மிகவும் கஷ்டமாக உள்ளது.
படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம்
அதிலும் தஞ்சை பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் பஸ்கள், வல்லம், மருத்துவக்கல்லூரி செல்லும் பஸ்கள் மற்றும் இதே வழித்தடத்தில் புதிய பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் பஸ்களின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொள்கிறார்கள். படிக்கட்டுகள் மட்டும் அல்லது, பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கம்பிகளையும் பிடித்துக்கொண்டு தொங்கியவாறு பயணம் மேற்கொள்கிறார்கள். மாணவர்கள் தான் இவ்வாறு பயணம் செய்கிறார்கள் என்றால் மாணவிகளும், மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் பஸ் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணம் செய்வதையும் காண முடிகிறது.
விபத்துக்குள்ளாகும் நிலை
மாலை நேரத்தை காட்டிலும் காலை 7 மணி முதல் 9 மணி வரை பஸ்களில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. இதனால் பஸ்சும் மெதுவாக சென்ற வண்ணம் உள்ளது. சில நேரங்களில் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்லும் மாணவர்கள் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலையும் காணப்படுகிறது.சில நேரங்களில் சாலைகளில் நடந்து செல்வோர் கூட, பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்வதை பார்த்து திட்டிக்கொண்டே செல்கிறார்கள். எனவே பள்ளி நாட்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவ, மாணவகளின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
கூடுதல் பஸ்கள்
மேலும் போக்குவரத்து போலீசாரும் இதனை கண்காணித்து, படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுப்பதோடு, அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழும் முன்பு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.