தேங்கிய கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பகுதியில் நாராயணன் காலனி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மழைநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கொண்டு செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டது. அந்த கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து புதிதாக கால்வாய் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அந்தப் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. அதில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் பொது மக்களுக்கு உடல் பாதைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொசுக்களின் உற்பத்தியும் அதிகரித்து உள்ளது.நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நாராயணன் காலனி பகுதியில் கொசு மருந்தும் அடிப்பதில்லை தூய்மை பணிகளையும் மேற்கொள்வதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருவதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களின் தாக்குதல் காரணமாக தொற்று நோய்களுக்கு பொதுமக்கள் ஆளாகும் சூழலும் ஏற்பட்டு உள்ளது. எனவே நாராயணன் காலனி பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பை விரைந்து முடிப்பதற்கு முன்வர வேண்டும். அதற்கு முன்பு குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்காமல் சீரான முறையில் செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரப் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.