பட்டப்பகலில் துணிகரம்: ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்


பட்டப்பகலில் துணிகரம்: ரூ.10 கோடி கேட்டு தொழிலதிபரை கடத்திய கும்பல்
x

ரூ.10 கோடி கேட்டு தொழில் அதிபரை 4 பேர் கும்பல் கடத்தியது. போலீசார் தங்களை துரத்தி வந்ததால் ஓடும் காரில் இருந்து அந்த கும்பல் தொழில் அதிபரை கீழே தள்ளிவிட்டது.

தேனி,

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம் (வயது 68). இவர் கோழிக்கறி மற்றும் முட்டை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். மேலும் வாழை மற்றும் திராட்சை விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் அவர் திராட்சை தோட்டத்திற்கு சென்றுவிட்டு மோட்டார்சைக்கிளில் ராயப்பன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அவரது திராட்சை தோட்டம் அருகே உள்ள சண்முகா நதி கால்வாய் பகுதியில் வந்தபோது, கார் ஒன்று நின்றது.

காரில் கடத்தல்

அப்போது திடீரென காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளை உதைத்து கீழே தள்ளினர். பின்னர் அதிசயத்தை காரில் குண்டுக்கட்டாக தூக்கிபோட்டு கடத்தி சென்றனர். அப்போது, அதிசயம் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தோட்டதொழிலாளி பாலமுருகன் என்பவர் காரின் பின்னால் சிறிது தூரம் ஓடினார். ஆனால் அந்த கார் மின்னல் வேகத்தில் சென்றது.

இதையடுத்து அவர், அதிசயத்தின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அதிசயத்தின் உறவினர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் கொடுத்தனர். அவரது உத்தரவின்படி, போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து அதிசயத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

வாகன தணிக்கை

இதன் ஒரு பகுதியாக ஆண்டிப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை சந்தேகத்தின்பேரில் போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது.

இதையடுத்து போலீசார் ஜீப்பில் பின்தொடர்ந்து சென்றனர். அந்த காரில்தான் அதிசயம் இருந்தார். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் ஓடும் காரில் இருந்து அதிசயத்தை கீழே தள்ளி விட்டனர். இதில் படுகாயமடைந்த அதிசயத்தை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்த்திரியில் சேர்த்தனர்.

ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்

இதையடுத்து போலீசார் காரை பின்தொடர்ந்து சென்று மடக்கி பிடித்தனர். அதன்பின்னர் காரில் இருந்த மதுரையை சேர்ந்த 4 பேரை பிடித்து ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் குறித்து அதிசயம் கூறுகையில், என்னை கடத்திய கும்பல் எனது பையில் இருந்த ஏ.டி.எம்.கார்டை பறித்து கொண்டனர். மேலும் ரூ.10 கோடி தர வேண்டும் இல்லையென்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். போலீசார் வாகனம் பின் தொடர்ந்து வருவதை பார்த்ததும் அவர்கள் என்னை ஓடும் காரில் இருந்து கீழே தள்ளிவிட்டனர் என்றார்.


Next Story