சமாதான கூட்டத்தை இருளர்கள் புறக்கணித்து போராட்டம்


சமாதான கூட்டத்தை இருளர்கள் புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 17 March 2023 12:15 AM IST (Updated: 17 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்க கோரி சமாதான கூட்டத்தை இருளர்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியம் வி.குமாரமங்கலம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 35 சென்ட் நிலம் உள்ளது. இதனை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள இருளர் இன மக்களுக்கு அந்த இடத்தை பிரித்து இலவச வீட்டு மனை பட்டாவாக வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இதையடுத்து அந்த இடத்தில் இருளர் இன மக்கள் குடிசை அமைத்து பயன்படுத்த முயன்றனர். இதற்கு அந்த தனிநபர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை உருவானது. இந்த பிரச்சினை தொடர்பாக விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் அந்தோணிராஜ், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஸ்வரி, கம்மாபுரம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மற்றும் இருதரப்பினரை சோ்ந்தவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிரச்சினைக்குரிய அந்த இடத்தை வகை மாற்றம் செய்த பின்பு வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இருளா் இன மக்கள் எங்களுக்கு உடனே வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் உரிய பதில் ஏதும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருளர் இன மக்கள் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கோகுல கிறிஸ்டிபன் தலைமையில் சமாதான கூட்டத்தை புறக்கணித்தனர். பின்னர் அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சமாதான கூட்டத்தில் சுமூக முடிவு ஏற்படவில்லை.




Next Story