கலெக்டரின் காரை முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி விவசாயிகள் தர்ணா


கலெக்டரின் காரை முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி விவசாயிகள் தர்ணா
x

கலெக்டரின் காரை முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள நிலங்களுக்கு செல்ல பாதை அமைத்துதரக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் 5 பேர் மட்டுமே கலெக்டரை சந்திக்க செல்ல வேண்டும் என தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருந்த கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து முற்றுகையிட்டு கைகளில் திருவோடு ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டரை நீர்த்தேக்கத்துக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 3 சென்ட் இலவச வீட்டுமனை, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு, பள்ளிக்கூடம், குடிநீர் வசதி ஆகியவை செய்து தரப்படும் என அரசு அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், எதுவுமே செல்லவில்லை. மேலும் நீர்த்தேக்கத்தின் மறுபுறம் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல 4 ஆண்டுகளாக பாதை வசதியும் செய்துதரவில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் 4 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் பாதை அமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மக்களைத் திரட்டி மாபெரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம்' என தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியாவை சந்தித்து மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.


Next Story