குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடந்த பலிதர்ப்பண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குழித்துறை:
ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று குழித்துறை தாமிரபரணி ஆற்றில் நடந்த பலிதர்ப்பண நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை தினத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு பலிதர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதம் 1-ந் தேதி, 31-ந் தேதி என 2 அமாவாசை தினம் வருகிறது.
கேரள பஞ்சாங்கத்தின் படி முதல் அமாவாசையான நேற்று பலி தர்ப்பணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கேரள அரசு நேற்று விடுமுறை அறிவித்திருந்தது. இதையொட்டி குமரி எல்லையோரத்தை சேர்ந்த ஏராளமான கேரள மக்கள் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பலி தர்ப்பணம் செய்ய வந்தனர்.
இதுபோல குமரி மாவட்ட மக்களும் பலிதர்ப்பணம் செய்ய வந்தனர். இவர்களின் வசதிக்காக குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள மகாதேவர் கோவில் அருகில் பிரம்மாண்டமான கொட்டகை அமைத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
பலிதர்ப்பண பொருட்கள்
நேற்று அதிகாலை 4.30 மணி முதல் பலி தர்ப்பணம் நிறைவேற்றுபவர்கள் மகாதேவர் கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கு வர ெதாடங்கினர். அங்கு பலி தர்ப்பணம் நிறைவேற்றுவதற்கு தேவையான பொருட்களுடன் புரோகிதர்கள் பலர் அமர்ந்திருந்தனர்.
பலி தர்ப்பணம் நிறைவேற்ற வந்தவர்கள் முதலில் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சென்று மூழ்கி ஈரத் துணியுடன் வந்து பந்தலில் அமர்ந்திருந்த புரோகிதர்களிடம் இருந்து பலிதர்ப்பண பொருட்களை வாழை இலையில் பெற்றனர். தொடர்ந்து புரோகிதர்கள் மந்திரங்கள் ஓதினர். பின்னர் வாழை இலையுடன் அந்த பலிதர்ப்பண பொருட்களை தலையில் சுமந்து சென்று மீண்டும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி அவற்றை நீரில் விட்டு விட்டு கரை ஏறினர். பின்னர் கோவிலில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.