முதன்முறையாக தார்சாலை


முதன்முறையாக தார்சாலை
x

கடசனக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு ரூ.70 லட்சத்தில் முதன்முறையாக தார்சாலை அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் பணி தொடங்கியது.

நீலகிரி

கூடலூர்

கடசனக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு ரூ.70 லட்சத்தில் முதன்முறையாக தார்சாலை அமைக்கும் பணி, பூமி பூஜையுடன் பணி தொடங்கியது.

சேறும், சகதியுமான சாலை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கடசனக்கொல்லி ஆதிவாசி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக தினமும் தேவர்சோலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ- மாணவிகளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று திரும்புகின்றனர்.

இந்த நிலையில் தேவர்சோலையில் இருந்து கடசனக்கொல்லிக்கு செல்லும் சாலை கரடு, முரடாக காணப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் சோலிங்கற்கள் மட்டுமே பதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுவதால் வாகனங்கள் இயக்குவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.

பூமி பூஜை

மேலும் அவசர காலங்களில் நோயாளிகள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு விரைவாக கொண்டு செல்ல முடிவதில்லை. இதனால் தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையொட்டி 2019-20-ம் ஆண்டுக்கான சிறப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தேவர்சோலை பேரூராட்சி நிர்வாகம் ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கியது. தொடர்ந்து 1.60 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக பூமி பூஜை போடப்பட்டது.

தொடர்ந்து பேரூராட்சி தலைவர் வள்ளி, துணைத்தலைவர் யூனிஸ் பாபு ஆகியோர் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

மகிழ்ச்சி

இதற்கிடையில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதால் ஆதிவாசி மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறும்போது, இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. கரடு-முரடான சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது. தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என்றனர்.


Next Story