குருபகவான் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி சாமி தரிசனம்
ஆலங்குடி குருபகவான் கோவிலில் நடிகர் சமுத்திரக்கனி சாமி தரிசனம்
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் அருகே நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் வியாழக்கிழமை குருவார வழிபாட்டை முன்னிட்டு கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. அப்போது இந்த குருவார வழிபாட்டில் திரைப்பட நடிகர் சமுத்திரக்கனி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையை முன்னிட்டு குரு தெட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.