உத்தரகோசமங்கை கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்


உத்தரகோசமங்கை கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி தரிசனம்
x

திருஉத்தரகோசமங்கை கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சாமி தரிசனம் செய்தார்.

ராமநாதபுரம்,

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். நேற்று காலை ராமநாதபுரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை கோவிலுக்கு சென்ற அவருக்கு கோவில் நுழைவு வாசலில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் உள்ளிட்டோர் அவரை அழைத்து சென்றனர். மங்களநாதர் மற்றும் மங்களநாயகி அம்மனை தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து, ஒரே மரகத கல்லினால் ஆன அபூர்வ பச்சை மரகத நடராஜர் சன்னதிக்கு சென்றார். மரகத நடராஜரின் சிறப்புகளை கோவில் குருக்கள் விளக்கி கூறினார். அதனை ஆர்வமுடன் கேட்டறிந்த கவர்னர் ரவி, மரகத நடராஜரை தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

கவர்னருக்கு ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானம் சார்பில் மரகத நடராஜர் படம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டார்.

தேவர் நினைவிடம்

நேற்று மாலையில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்திற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அங்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் கவர்னர் ரவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக நினைவாலய வளாகத்தில் உள்ள விநாயகர், முருகன் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். இதை தொடர்ந்து தேவர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று சுற்றி பார்த்தார்.

இம்மானுவேல் சேகரன் நினைவிடம்

முன்னதாக பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு கவர்னர் ரவி சென்று, அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


Next Story