விநோத நோய் பாதிப்பால் படுத்த படுக்கையாக கிடக்கும் மகள்கள்

வாய்மேடு அருகே விநோத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக கிடக்கும் மகள்களை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என ஏழ்மை நிலையில் உள்ள ஒரு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வாய்மேடு:
வாய்மேடு அருகே விநோத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக கிடக்கும் மகள்களை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என ஏழ்மை நிலையில் உள்ள ஒரு பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உடல் நலம் திடீர் பாதிப்பு
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே உள்ள தகட்டூர் சமத்துவபுரத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வரி (வயது51). இவருடைய கணவர் மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இவர்களுக்கு சத்யா (28), வித்யா (26), சங்கீதா (24) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சத்யாவுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இளைய மகள்கள் வித்யா, சங்கீதா ஆகிய 2 பேரும் அங்கு உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்தனர். எப்படியாவது இவர்களை கரை சேர்த்து விடலாம் என்று நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தி வந்த வேளையில் கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் ராஜேஸ்வரியின் குடும்பத்துக்கு பேரிடியாக அமைந்தது. அன்று வழக்கம்போல் வித்யா, சங்கீதா ஆகிய 2 பேரும் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினர். இந்த நிலையில் அவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
படுத்த படுக்கையாக...
வீட்டிலேயே மயங்கி விழுந்த அவர்களால் அதன் பிறகு எழுந்து நடக்க கூட முடியவில்லை. ஓடி, ஆடி பள்ளிக்கு சென்று வந்த பெண் குழந்தைகள் 2 பேரின் உடல் நிலையும் திடீரென படுத்த படுக்கைக்கு செல்லும் அளவுக்கு மோசமான பாதிப்புக்கு உள்ளானது ராஜேஸ்வரி மற்றும் குடும்பத்தினரை பேரதிர்ச்சிக்கும், சோகத்துக்கும் உள்ளாக்கியது. ஆனாலும் மகள்களை காப்பாற்ற கடந்த 8 ஆண்டுகளாக ராஜேஸ்வரி கடுமையாக போராடி வருகிறார். கணவரை இழந்த அவர் நடக்க முடியாத தனது மகள்களை தானே பராமரித்து, வேலைக்கும் சென்று வருகிறார்.நரம்பு சம்பந்தமான ஏதோ ஒரு விநோத நோயால் மகள்கள் 2 பேரும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறி ராஜேஸ்வரி கண்ணீர் வடிக்கிறார். தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 2 பேரும் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். அங்கிருந்து மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். ஆனாலும் விநோத நோயின் தாக்கம் குறையவில்லை. அவர்களை குழந்தைகள் போல கவனித்து வரும் ராஜேஸ்வரி, அன்றாட வருவாய்க்காக தற்போது 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார்.
அரசு உதவி
இதுகுறித்து ராஜேஸ்வரி கூறுகையில், 'திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் எனது 2 மகள்களும் நடக்க முடியாத நிலைக்கு சென்று விட்டனர். ஏழ்மை நிலையில் உள்ள நான் எனது குழந்தைகளை மிகுந்த சிரமத்துடன் பராமரித்து வருகிறேன். தற்போது தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை மட்டும் கிடைத்துள்ளது. வேறு எந்த சலுகையும் கிடைக்கவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை கேட்டு பார்த்தேன். ஆனால் எந்த உதவியும் வழங்கப்படவில்லை. ஒரே நேரத்தில் 2 மகள்களும் படுத்த படுக்கையாகி விட்டதால் தினசரி சிரமத்துடன் குடும்பம் நடத்தி வருகிறேன். எனது மகள்களின் நிலையை கருத்தில் கொண்டு அரசு எனது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் ' என்றார்.