ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்


ஆடிப்போன அடுக்குமாடி வாசிகள்
x
தினத்தந்தி 9 Dec 2022 12:30 AM IST (Updated: 9 Dec 2022 12:31 AM IST)
t-max-icont-min-icon

அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகை வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின்இணைப்புக்கும் கட்டணம் உயர்ந்துள்ளதை பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

திண்டுக்கல்

அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் மோட்டார்கள், கார் நிறுத்தம், படிக்கட்டுகள் மற்றும் பொது இடங்களில் எரியும் மின்விளக்குகள், எந்திர 'லிப்ட்'கள் போன்றவைகளுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

வீடுகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும் இது கடுமையாக இருப்பதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.

மின்சாரக் கட்டண உயர்வு

புதிய மின்சாரக் கட்டண உயர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைமுறைக்கு வந்தது. நாம் கட்டுகிற மின்சாரக் கட்டணம், நமக்கு அரசு தருகிற மானியம் ஆகியவை மூலமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.

மின்சாரம் கொள்முதல் செய்வது, ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது, வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவது போன்ற செலவினங்களுக்காக மின்வாரியத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.77 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இவ்வாறு வரவுக்கு மீறி செலவாகிவருவதால் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் மின்வாரியம், சற்று அதில் இருந்து மீளுவதற்காக மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு மின்சார ஒழுங்கு முறை ஆணையமே முன்வந்து, 15 சதவீதம் மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தது. அதன்பின்னர், எந்தவித கட்டண உயர்வும் செய்யப்படவில்லை.

தற்போது தமிழகத்தில் புதிய மின் கட்டணத்தை 34 சதவீதம் உயர்த்தி மின்சார ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

இந்த புதிய மின்கட்டண உயர்வால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் கிடையாது. அதற்கு மேல் பதிவாகும் யூனிட்டுகளுக்கு உயர்த்தப்பட்ட இந்த புதிய மின் கட்டணம் பொருந்தும். இதனால் முன்பு இருந்த கட்டணத்தைவிட, குறைந்தது ரூ.100 முதல் ரூ.1,000-க்கு மேல் ஒவ்வொருவரும் அதிகமாகச் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

அடுக்குமாடி வாசிகள் ஆதங்கம்

இதில் இன்னும் ஒருபடி மேலாக, பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பைக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு மேலும் அதிர்ச்சிதரும் வகையில் கட்டண உயர்வு அமைந்து இருக்கிறது. இதனால் அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் ஆதங்கத்தில் உள்ளனர்.

சென்னை உள்பட மாநிலம் முழுவதும், பல வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட்ட அறை, வாகன நிறுத்தங்கள், 'லிப்ட்', குடிநீர் மோட்டார் பம்ப், 'ஜிம்' போன்ற பொதுப் பயன்பாட்டுக்காக, தனி மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய மின் கட்டண உயர்வு வரும் வரை, இதுபோன்ற பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு, வீடுகள் போன்றே ஒரே சீரான மின்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதன்படி, முதல் 100 யூனிட் இலவசம். 500 யூனிட் வரை மானியக் கட்டணம் என்ற சலுகைகள் கிடைத்தன. தற்போது இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு கட்டணச் சலுகை நிறுத்தப்பட்டு, வணிக ரீதியிலான கட்டணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புக் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.8-ம், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு மாதம் ரூ.100-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

இதுவரைப் பொதுப் பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் இருந்து வந்த நிலை மாறி, தற்போது வீடுகளுக்கான கட்டணத்துடன் கூடுதலாக இதையும் சேர்த்துச் செலுத்த வேண்டிய நிலைக்கு அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வந்து இருக்கிறார்கள். இதில் சில அடுக்குமாடி குடியிருப்புகளில் சாதாரண மின் இணைப்புகளைக் கூட பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளாகக் கருதி, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாயாகக் கணக்கிட்டு பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடும் எதிர்ப்பு

இதற்கு அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதோடு, இதற்கு மாற்று ஏற்பாட்டை அரசு செய்து தரவேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். பெரும்பாலும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் என்ற மாயை இருக்கிறது. அவர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பாதிப்பை ஏற்படுத்தாது என்று நினைப்பது தவறு. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், வங்கிக் கடன் பெற்று அதை ஒவ்வொரு மாதமும் கஷ்டப்பட்டு செலுத்திவருபவர்கள் என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது. இந்த கட்டண உயர்வால் அவர்கள் மாதம் மாதம் செலுத்தும் பராமரிப்புச் செலவு கடுமையாக அதிகரித்து அவர்களை அதிர்ச்சியில் தள்ளியிருக்கிறது.

கூடுதல் செலவு

திண்டுக்கல் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் குறைந்த அளவே உள்ளது. அதேநேரம் வாடகை வீடுகள் அதிக அளவில் இருக்கின்றன. அதிலும் ஒரு வளாகத்தில் 5-க்கும் மேற்பட்ட வாடகை வீடுகள் உள்ளன. இதுபோன்ற வாடகை வீடுகளுக்கு ஆழ்துளை கிணறு, பொதுவான மின்விளக்கு ஆகிய பயன்பாட்டுக்கு தனியாக ஒரு மின்இணைப்பு உள்ளது. இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வாடகை வீடுகளுக்கான பொது பயன்பாட்டு மின்இணைப்புக்கும் கட்டணம் உயர்ந்துள்ளது. இதுபற்றி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-

வங்கி ஊழியர் அறிவு (திண்டுக்கல்) :- நான் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறேன். பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அது வணிக பயன்பாட்டுக்கு மின்சார கட்டணம் வசூலிப்பது போன்று இருக்கிறது. இதனால் பல குடும்பங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே குடியிருப்புகளுக்கு பொது பயன்பாட்டுக்கான மின்கட்டணத்தை குறைக்க வேண்டும். இதற்கு அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

வாடகைக்கு குடியிருப்பவர்கள்

வக்கீல் தமிழ்வேந்தன் (பழனி) :- நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். ஏற்கனவே சொத்துவரி உயர்வால் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்து விட்டது. இந்த நிலையில் வாடகை வீடுகளுக்கு குடிநீர், மின்விளக்கு ஆகியவற்றின் பொது பயன்பாட்டு மின்இணைப்புக்கான கட்டணமும் கடுமையாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதை வாடகைக்கு குடியிருப்பவர்களே பாதிக்கப்படுகின்றனர். இதனால் வாடகை வீடுகளில் வசிக்கும் சாதாரண, நடுத்தர மக்கள் சிரமத்தை சந்திக்க வேண்டியது இருக்கிறது. எனவே மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

குடும்பத்தலைவி ஆர்த்தி சரவணன் (நத்தம்):- 3-க்கும் மேற்பட்ட வாடகை வீடுகளுக்கு தண்ணீர் பயன்பாட்டுக்கு தனியாக ஒரு மின்இணைப்பு உள்ளது. முதல் 100 யூனிட் மின்சார கட்டணம் கிடையாது என்பதால், தண்ணீர் அதிகமாக தேவைப்படும் கோடைகாலத்தில் மட்டுமே மின்கட்டணம் வரும். ஆனால் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னர் மிகவும் அதிகமாக கட்டணம் வருகிறது. இதனால் வாடகைக்கு வசிப்பவர்களே அதை செலுத்தும் நிலை உள்ளது. வாடகையுடன் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கூடுதலாக கொடுக்க வேண்டியது இருக்கிறது. இதனால் குடும்பத்தின் மாத செலவு அதிகரித்து இருக்கிறது. எனவே குடியிருப்புகளில் தண்ணீர் பயன்பாட்டுக்கான மின்இணைப்புக்கு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story