விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை
திருமருகல் பகுதியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திட்டச்சேரி:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் திட்டச்சேரி, திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், வவ்வாலடி, சேஷமூலை, திருச்செங்காட்டங்குடி, குத்தாலம், நரிமணம், திருப்புகலூர், அகரக்கொந்தகை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய மிதமான மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் இன்றி வெடித்து கிடந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.