மாற்றுத்திறனாளிகளுக்கான தின நிகழ்ச்சி
சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தின நிகழ்வு நடைபெற்றது.
காரைக்குடி,
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சிறப்பு கல்வியியல் மற்றும் அறிவியல் துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான தின நிகழ்வு, பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. துறையின் தலைவர் பேராசிரியர் சுஜாதா மாலினி வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திறன்களை பெற்றுள்ளார்கள். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். உலகின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களான ஸ்டீபன் ஹாக்கிங் ஐன்ஸ்டீன் மற்றும் பல்வேறு நூல்களை எழுதிய ஹெலன் ஹெல்லர் போன்றவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான். அழகப்பா பல்கலைக்கழக மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது என்று கூறினார்.
காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், மனவலிமையோடு இருந்தால் எந்த தடையாக இருந்தாலும் தகர்த்தெறிந்து வெற்றி பெறலாம் என்றார். காரைக்குடி மத்திய மின் வேதியியல் நிறுவனத்தின் முது நிலை விஞ்ஞானி வேதவல்லி, அழகப்பா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதையடுத்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துறை மாணவர்கள் தயாரித்த சிறப்பு கல்வியியல் துறையின் வளர்ச்சி குறித்த குறும்படம் நிகழ்ச்சியில் இடம்பெற்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை சட்டம் பற்றிய விவர குறிப்பேடு துறை மாணவர்களால் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த குறிப்பேட்டை துணைவேந்தர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.