நாமகிரிப்பேட்டை அருகே தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் பலி-மனைவிக்கு திருப்பதி லட்டு கொடுக்க சென்றபோது பரிதாபம்
நாமகிரிப்பேட்டை அருகே மனைவிக்கு திருப்பதி லட்டு கொடுக்க சென்றபோது தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் சிக்கி பலியானார்.
ராசிபுரம்:
தனியார் நிறுவன ஊழியர்
ராசிபுரம் அருகே உள்ள முருங்கபட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் முத்துகுமார் (வயது 32). டிப்ளமோ படித்துள்ள இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் தம்மம்பட்டியை சேர்ந்த ஆனந்தி (28) என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
சமீபத்தில் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் ஆனந்தி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். குழந்தை பிறந்ததை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துகுமார் திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் மொட்டை அடித்து விட்டு ஊருக்கு திரும்பினார்.
விபத்தில் பலி
இந்தநிலையில் நேற்று மாலை அவர் குழந்தையை பார்ப்பதற்காகவும், மனைவிக்கு திருப்பதி கோவில் பிரசாதமான லட்டை கொடுக்கவும் தம்மம்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பிலிப்பாகுட்டை பகுதியில் மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் புகுந்தது. நாய் மீது மோதாமலிருக்க முத்துகுமார் முயன்றபோது, நிலைதடுமாறி சாலையில் விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்தில் இறந்த முத்துகுமார் ராசிபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் வேம்பு சேகரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாமகிரிப்பேட்டை அருகே மனைவிக்கு திருப்பதி லட்டு கொடுக்க சென்ற தனியார் நிறுவன ஊழியர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.