நாமகிரிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
நாமகிரிப்பேட்டை அருகே வீடு கட்டுமான பணியின் போது மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி பலியானார்.
ராசிபுரம்:
தொழிலாளி
ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மங்களபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டுக்கு சிமெண்டு கலவை கலந்து எந்திரத்தின் மூலம் கட்டிடத்தின் மேல் பகுதிக்கு அனுப்பும் பணியில் சேலம் மாவட்டம், காரிப்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் அக்ரஹாரத்தை சேர்ந்த சசி கண்ணன் (வயது 39) என்பவர் ஈடுபட்டு கொண்டிருந்தார்.சிமெண்டு கலவை கீழ்ப்பகுதியில் இருந்து உயரமான பகுதிக்கு எந்திரத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அப்போது எந்திரத்தில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு தொட்டி, மின்சார வயரில் உரசியதாக கூறப்படுகிறது.
மின்சாரம் தாக்கி பலி
இதனால் மின்சாரம் பாய்ந்து சசி கண்ணன் தூக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சசி கண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களபுரம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.