கிருஷ்ணகிரியில் வீட்டில் பெயிண்டு அடித்தபோது தவறி விழுந்து வாலிபர் பலி-உறவினர்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் வீட்டில் பெயிண்டு அடித்தபோது, தவறி விழுந்து வாலிபர் பலியானார். அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெயிண்டர்
கிருஷ்ணகிரி வெங்கடாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தர்கா பகுதி கே.ஏ.நகரை சேர்ந்தவர் ஜாவித் பாஷா (வயது 24). பெயிண்டர். நேற்று முன்தினம் இவர், அதேபகுதியை சேர்ந்த நாகசாமி என்பவரின் வீட்டுக்கு பெயிண்டு அடிக்கும் வேலைக்காக சென்றார். அதற்காக சாரம் அமைத்து ஜாவித் பாஷா பெயிண்டு அடித்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கயிறு அறுந்ததில் ஜாவித் பாஷா கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை முன்பு நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்டனர். பலியான ஜாவித் பாஷாவின் குடும்பத்திற்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து சிறிது நேரத்திற்கு பிறகு அவரது உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.