தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி-உறவினர்கள் சாலை மறியல்
மத்தூர்:
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறியபோது, மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார். உரிய இழப்பீடு கேட்டு அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேங்காய் பறித்த வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே உள்ள மாதம்பதி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 27). இவர் நேற்று காலை கொடமாண்டப்பட்டி கிராமத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய் பறிக்க சென்றார். உரிய உபகரணங்களுடன் 5-க்கும் மேற்பட்ட மரங்களில் ஏறி அவர் தேங்காய்களை பறித்தார்.
பின்னர் தேங்காய் பறிக்க மற்றொரு மரத்தில் ஏறி கொண்டிருந்தார். அப்போது அந்த மரத்தில் இருந்து காய்ந்த மட்டை ஒன்று, தென்னை மரத்தை ஒட்டி சென்ற மின் கம்பி மற்றும் மணிகண்டன் மீது ஒரே சமயத்தில் விழுந்தது.
மின்சாரம் தாக்கி பலி
இதில் மணிகண்டனை மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தென்னை மரத்திலேயே உடல் கருகி பலியானார். அவரது உடல் தென்னை மரத்தில் தலை கீழாக தொங்கியவாறு இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போச்சம்பள்ளி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் மின்சாரத்தை நிறுத்தி, மரத்தில் தலை கீழாக தொங்கிய மணிகண்டன் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், தென்னை மரத்தின் வழியாக செல்லும் மின் கம்பிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
சாலை மறியல்
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி, மணிகண்டன் உடலை எடுக்கவிடாமல் போலீசார், வருவாய்த்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டோர் ஊத்தங்கரை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கொடமாண்டப்பட்டி பிரிவு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
சோகம்
பின்னர் போலீசார் மின்சாரம் தாக்கி பலியான மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேங்காய் பறிக்க தென்னை மரத்தில் ஏறிய வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.