ஏரியில் தவறி விழுந்து மூதாட்டி பலி
ஓசூர்:
ஓசூர் சானசந்திரம் காந்தி நகரை சேர்ந்தவர் லட்சுமய்யா. இவருடைய மனைவி வீரம்மா (வயது 77). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி வீரம்மா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் வீரம்மா கிடைக்கவில்லை. இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் சானசந்திரம் பகுதியில் ஒரு தனியார் குடியிருப்பு அருகில் உள்ள ஏரியில் அவர் உடல் கிடப்பதாக ஓசூர் அட்கோ போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று ஏரியில் தண்ணீரில் மூழ்கி இறந்த வீரம்மா உடலை மீட்டனர். மேலும் விசாரணை நடத்தியதில், அவர் ஏரியில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது. போலீசார் வீரம்மா உடலை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.