இறந்தவரின் உடலை எரிக்க காட்டாற்றை கடந்து 3 கி.மீ. தூரம் சுமந்து சென்ற உறவினர்கள்- கடம்பூர் அருகே அவலம்
கடம்பூர் அருகே இறந்தவரின் உடலை எரிக்க காட்டாற்றை கடந்து 3 கி.மீ. தூரம் உறவினர்கள் சுமந்து சென்றனர்.
டி.என்.பாளையம்
கடம்பூர் அருகே இறந்தவரின் உடலை எரிக்க காட்டாற்றை கடந்து 3 கி.மீ. தூரம் உறவினர்கள் சுமந்து சென்றனர்.
காட்டாறுகள்
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் அருகே உள்ள அரிகியம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சித்து மாரி (வயது 55). இவர் உடல் நலக்குறைவால் கடந்த 20 நாட்களாக கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை அவர் இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை உறவினர்கள் மாக்கம்பாளையம் கொண்டு செல்வதற்காக கோவையில் இருந்து ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். சத்தியமங்கலம், கடம்பூரை தாண்டி குரும்பூர் பள்ளம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. சமீபத்தில் பெய்த மழையால் குரும்பூர் பள்ளத்தில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளத்தில் சென்றால் சேற்றில் சிக்கி விடும் என கூறி ஆம்புலன்சை டிரைவர் நிறுத்திவிட்டார்.
உடலை சுமந்து சென்றனர்
இதையடுத்து சித்து மாரியின் உடலை உறவினர்கள் ஆம்புலன்சில் எடுத்து சுமந்து கொண்டு காட்டாற்றில் இறங்கி நடந்து செல்ல தொடங்கினார்கள். சுமார் 3 கி.மீ. தூரம் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தை கடந்து மாக்கம்பாளையம் சென்று சேர்ந்தனர். பின்னர் அவரது உடலை எரித்தனர்.
இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறும்போது, 'சத்தியமங்கலத்தை கடந்து கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்ல குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் என 2 காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு முறை மழை பெய்யும்போது இந்த 2 காட்டாறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடும். இதனால் அந்த வழியாக மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்படும்.
தரைப்பாலம் கட்ட வேண்டும்
எங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அன்றாட தேவைகளுக்கு பொருட்களை வாங்குவதற்காக கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றோம். எனவே கடம்பூர்-மாக்கம்பாளையம் இடையே தரைப்பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.