பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் பாடம் நடத்திய ஆசிரியர் திடீர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மாரியம்பட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது 56). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பாப்பிரெட்டிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தொழிற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் சேகர் நேற்று மதியம் 12 மணிக்கு பள்ளியில் பிளஸ்-1 மாணவிகளுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அவர் முரளி என்ற மற்றொரு ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் பாடம் நடத்தியபோது ஆசிரியர் திடீரென இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.