சிவகிரி அருகே பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு; போலீஸ் விசாரணை


சிவகிரி அருகே பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு; போலீஸ் விசாரணை
x

சிவகிரி அருகே பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.

ஈரோடு

சிவகிரி

சிவகிரி அருகே பிறந்து 25 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது.

பச்சிளம் குழந்தை

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி ஜான்சி ராணி (25). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் ஜான்சிராணி மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு கடந்த 4-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்தது முதல் அதற்கு சளி தொந்தரவு இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் பெற்றோர் குழந்தைக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்தார்கள்.

இந்தநிலையில் நேற்று காலை ஜான்சிராணி குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு, படுக்கையில் தூங்க வைத்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, குழந்தை எந்த அசைவும் இல்லாமல் இருந்தது.

விசாரணை

இதையடுத்து சுரேசும், ஜான்சிராணியும் பதறி அடித்து குழந்தையை சிகிச்சைக்காக தாண்டாம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினார்கள். அதன்படி குழந்தையை பெற்றோர் பெருந்துறைக்கு எடுத்து சென்றார்கள்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story